Saturday, April 7, 2012

திருவண்ணாமலை கிரிவலமா...? இல்லை கிலிவலமா...?


திருவண்ணாமலை - தமிழகத்தின் ஆன்மிக வரைபடத்தில் ஒரு முக்கிய இடம் பிடித்த ஒன்று.

வர்த்தகம், தொழில்துறை, விவசாயம், என்று எந்தவொரு முகமுடியும் அணிந்து கொள்ளாத ஊர். ஆன்மிகம் ஒன்றையே கொண்டு வளர்ந்த இந்த இடம் இப்பொழுது கல்வி முகத்தையும் கொண்டு விளங்குகிறது.

பிரிக்கப்பட்ட வடஆற்காடு மாவட்டத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தலைமையிடமாக இருக்கும் இந்த ஊர், மெல்ல திருடர்கள், நயவஞ்சகர்கள், ஏமாற்று பேர்வழிகளின் கூடாரமாக மாறிவருவது நிதர்சனமான உண்மை.

ரமண மகரிஷி ஆசிரமம் முலம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் இந்த ஊர், கூடவே ஏமாற்று பேர்வழிகள் உருவாவதற்கும் அச்சாணியாக மாறிவிட்டது. வெளிநாட்டினரால் பணபுழக்கம் ஏற்பட்ட போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து அதன் முலம் மக்கள் பயனடைந்து இருக்க வேண்டும். மாறாக, அவர்களை ஏமாற்றி பணம் பறித்து ஒரு சிலர் மட்டும் பயனடைந்து வருகிறார்கள்.

ஒரு காலத்தில் கார்த்திகை மாதத்தில் மட்டுமே வெளி உலகத்தின் பார்வையில் வந்த இந்த ஊர் சமிபகாலமாக, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பரபரப்புக்கு ஆளாகி விட்டது. கடவுளுக்கும் விளம்பரம் தேவை போல...எப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் கிரிவல பாதையில் விளக்குகள் அமைக்க நிதி கொடுத்தாரோ அப்பொழுது இருந்தே ஒரு நட்சத்திர அந்தஸ்து திருவண்ணாமலைக்கும் வந்து விட்டது. ரமணர் குடிகொண்ட இந்த ஊரில்தான் நித்யானந்தாவும் ஆசிரமம் அமைத்து இருக்கிறார். என்ன செய்ய...திருவண்ணமலையின் விதி அப்படி...!!

எதோ கிரிவலம் மட்டுமே அந்த ஊரின் முக்கிய நடைமுறை என்பது போல, அரசும் நடந்து கொள்கிறது. ஒவ்வொரு மாதமும் இந்த ஊரின் இயல்புதன்மை மாறி விடுகிறது. சாரை சாரையாய் வரும் பக்தர்கள் கூட்டத்தால் களை இழந்து போகும் இந்த ஊர் ஒரு நாள் தன் தனித்தன்மையும் இழக்கும்.

மாதத்தின் இரண்டு நாட்கள் மொத்த ஊரின் வழக்கமும் மாறி விடும். பேருந்துகள் ஊரின் உள் செல்லாது, ஆட்டோகளும் நடைபாதை கடைகளும் கிரிவல பாதையை ஆக்கிரமித்து கொள்ளும். பக்தர்கள் அதனூடே கிரிவலம் செல்வார்கள். இந்த ஊரை பற்றியே தெரியாத காவல்துறை நண்பர் பக்தர் ஒருவருக்கு வழி சொல்லி கொண்டு இருப்பார், செல்ல வேண்டிய ஒரு மைல் தூரத்திற்கு யானை விலை சொல்லி ஒரு வெளி ஊர் நண்பரை ஆட்டோ ஓட்டுனர் நண்பர் ஏமாற்றுவார், அடுத்து எந்த ஊருக்கு போக சொல்வார்களோ என்றே தெரியாமல் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்த இடம் தேடி பேருந்தை வளைத்து கொண்டு இருப்பார் அரசு பேருந்து ஓட்டுனர், எந்த ஊருக்கு செல்ல பயணிகள் காத்து கொண்டு இருக்கிறார்கள் என்றே தெரியாமல் பேருந்துகளின் தடங்களை தீர்மானித்து கொண்டு இருப்பார் ஒரு சிறப்பு போக்குவரத்து துறை அதிகாரி...


இந்த களேபரத்தில் திருடர்கள் அவர்களின் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருப்பார்கள், தாகம் தீர்க்க வேண்டிய ஒரு லிட்டர் மினரல் வாட்டர்?? 25 ரூபாய்க்கும் 30 ரூபாய்க்கும் பக்தரின் சட்டை பையை தீர்த்து கொண்டிருக்கும், சுற்றுலா வழிகாட்டி என்ற பெயரில் எதோ ஒரு வெளிநாட்டு பயணி தவறான ஒரு தகவலை பெற்று கொண்டு இருப்பார், இந்த ஊரின் வழியாக வேறு ஊருக்கு செல்ல வேண்டிய பயணி எந்த இடத்தில தான் செல்ல வேண்டிய பேருந்து நிற்கும் என்று தெரியாமல் முழித்து கொண்டிருப்பார், இந்த ஊரின் குடிமகன் அனைவரும் வீட்டினுள் முடங்கி கிடப்பர்...

இவ்வளவையும் பார்த்து கொண்டு முழு நிலவாக அருள் பாவிப்பார் அண்ணாமலையார். ஆனால் எப்போ முடியும் கிரிவலம், அந்த நேரத்தில் நம் ஊருக்கு சிறப்பு பேருந்து கிடைக்குமா...? சிறப்பு பேருந்து கட்டணம் செலுத்த பணம் மிஞ்சுமா..? ஒரு கையில் தன் குழந்தையும் இன்னொரு கையில் செருப்பு பையையும் பிடித்து கொண்டு, கூட வரும் மனைவி தொலைந்து விடக்கூடாது என்று அவளை திட்டி கொண்டும் மனதில் "ஓம் அருணாச்சலா.."என்று சொல்லி கொண்டு நடந்து அல்ல அல்ல...ஓடி கொண்டு இருப்பான் எதோ ஒரு சாமானிய பக்தன்...

இவ்வளவு தெரிந்த அரசு எந்த ஒரு திட்டத்தையும் தொலைநோக்கு பார்வையில் செயல் படுத்துவதாக தெரியவில்லை. கிரிவல பாதுகாப்பிற்காக வரும் காவலர்கள் தங்க விடுதி கட்ட படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. நல்ல அறிவிப்பு தான்...!!பாராட்ட பட வேண்டும்...ஆனால் முடியவில்லை. மாதம் இரண்டு நாள் சிறப்பு பணி, ஓய்வு எடுக்க அனுமதிக்க போவதில்லை. இயற்கை உபாதைகள் போக்க ஆங்காங்கே முதலில் கழிவறைகளை கட்ட வேண்டும், குடிநீர் வசதி செய்ய வேண்டும். அணைத்து ஊர்களில் இருந்து வரும் பேருந்துகளும் நிற்குமாறு ஒரு நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். கிரிவல பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஆட்டோகளின் ஏகபோக அடாவடிகளை அடக்க வேண்டும். கோவிலை சுற்றி ஆக்றிமிப்புகளை அகற்ற வேண்டும், தொல்லியல் துறை முலம் கோவிலின் தனித்தன்மை காக்க வேண்டும், சுற்றுலா துறையின் நடவடிக்கைகளை அதிக படுத்த வேண்டும், வெளிநாட்டினரை கண்காணிக்க வேண்டும்....(முடிந்தால் நம் முதல்வர் வருடம் ஒரு முறையேனும் கிரிவலம் வர வேண்டும்..அப்பொழுதுதான் இவை அனைத்தும் நடக்கும்)

இது போன்ற திட்டங்கள் நிறைவேறினால் ஒழிய, திருவண்ணாமலை கிரிவலம், கிலிவலமாக மாறாமல் இருக்கும்.