Sunday, May 8, 2011

நானும் விகடனும்...


ஜூனியர் விகடன் ஆரம்பித்த காலத்தில் வாசகர் ஒருவர் எழுதி இருந்த கடிதம்..."முன்பு விகடன் என்று கடையில் கேட்டால் ஆனந்த விகடன் தருவார்கள்,இப்பொழுது ஜூவி என்று கேட்டால் ஜூனியர் விகடன் தருகிறார்கள்...அப்போ ஆவி என்று கேட்டால்தான் ஆனந்த விகடன் தருவார்களா?" என்பது அந்த வாசகரின் கேள்வி...அதற்கு விகடன் ஆசிரியர் "நீங்கள் விகடன் என்றே கேளுங்கள் உங்களுக்கு ஆனந்த விகடன்தான் தருவார்கள்" என்றார். அந்த அளவிற்கு விகடன் என்ற வார்த்தை தமிழக மக்களோடு ஒன்றி விட்டது.

வழக்கமாக விகடனில் வரும் கவிதைகள், கட்டுரைகள் படிக்கும் பொழுது நமக்கும் அதை போல எழுத தோன்றும். அதை போல தோன்றியதுதான் இந்த கட்டுரையும். விகடனின் 85 ஆண்டு நிறைவையொட்டி வரும் "விகடனும் நானும்" பகுதியில் நாம் எழுதி அந்த கட்டுரை வெளிவந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நாம் அந்த அளவிற்கு பெரிய ஆளும் அல்ல, விகடன் அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து விடவும் இல்லை. இருந்தாலும் நாம் பதிவு செய்ய ஒரு தளம் இருக்கிறது அல்லவா....

எனக்கு பத்து வயது இருக்கும், எனது பாட்டி வீட்டில் ஒரு ஆண்டு விடுமுறையில் அறிமுகம் ஆனவன் இந்த விகடன். எதச்சையாக பொழுது போகாமல் எடுத்து படிக்க போய், இன்று ஒவ்வொரு வாரமும் விகடனிடம் பேசியே ஆக வேண்டும் என்ற அளவிற்கு ஒன்றி விட்டான். ஆரம்ப காலத்தில் "கிமு கிபி" படக்கதையில் ஆரம்பித்த படிக்கும் பழக்கம், பிறகு "ஹாய் மதன்" "சுஜாதாவின் கற்றதும் பெற்றதும்" சினிமா விமர்சனம் என்று நீண்டு இப்பொழது முதல் பக்கம் கொண்டு கடைசி பக்கம் வரை படித்தே ஆக வேண்டி இருக்கிறது. பள்ளி நாட்களில் விடுமுறையில் மட்டுமே படித்து வந்தேன். கல்லூரி வந்த பிறகு ஒவ்வொரு வாரமும் யார் முதலில் விகடனை வாங்கி வந்து படிப்பது என்று நண்பர்களுடன் போட்டி போடும அளவிற்கு இருந்த நாட்கள் மறக்க முடியாதது. அதில் வரும் வண்ணப் படங்கள் என் அறை சுவற்றை அழங்கரித்த அந்த நாட்கள்...!!!

விகடனிடம் நான் காதல் கொண்டது நான் எழுதி அனுப்பிய கட்டுரையும் தேர்வு செய்து மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்ட எழுத்து தேர்விற்கும், நேர்முக தேர்விற்கும் என் எழுத்தை மதித்து என்னை விகடன் அலுவலகத்திற்கு அழைத்த அந்த காலத்தில்தான். நான் சென்னை, அண்ணா சாலை விகடன் அலுவலத்தில் கழித்த அந்த ஒரு நாள் வாழ்கையில் மறக்க முடியாத நாள். வெளி காவலாளி முதல் தலைமை ஆசிரியர் வரை அவர்கள் காட்டிய அக்கறைதான் விகடனின் இந்த இமாலய வெற்றிக்கு சான்று. அப்போதைய ஆசிரியர் 80 வயது பாலசுப்ரமணியன் வந்து பேசிய விதம் விகடன் ஏன் இவ்வளவு இளமையாக இருக்கிறது என்பதை அழகாக காட்டியது. நான் அப்போது கடைசி கட்டத்தில் தேர்வு ஆகவில்லை என்ற போதும் என் விகடனிடம் கொண்ட அன்பு இன்னும் அதிகமாகி போனது.

என் எழுத்திற்கு துணையாக நின்றவன். என் அரசியல் ஆர்வத்தை தூண்டியவன் இந்த விகடன். இதோ இன்று என் புகைப்பட ஆர்வத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவன் இந்த விகடன்.

2003-04 கால கட்டத்தில் ஏற்பட்ட சில நிர்வாக சிக்கலில், விகடனின் படைப்புகள் மிகவும் தரம் குறைந்து போனது. ஆனால் சிலிர்த்து கொண்டு எழுந்த பினிக்ஸ் பறவை போல பறந்த விகடன் இதோ இப்பொழுது அழகிய வண்ண பேப்பரில் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

அவனின் 3D படங்கள், கூடவே ஆரம்பித்த நாணயம் விகடன், மோட்டார் விகடன், போன்ற அவன் சகோதர, சகோதரி படைப்புகள் விகடனின் அதே துடிப்போடு வந்து கொண்டு இருக்கிறது.

சுஜாதாவின் மறைவு, எப்படி விகடனிற்கு பேரிழப்போ, ஞானி, தபூ சங்கர், அறிவுமதி போன்றோரின் வருகை உத்வேகத்தை அளித்தது. இதோ என் வாசிப்பும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. உலக சினிமாவை என் முன் திரையிட்ட விகடன், என் ஊர் சுற்றுலா தளத்தை உலகிற்கு எடுத்து சொன்னான். உலகமே தயங்கிய போது, கலைஞரின் ஈழ மக்களின் நிலைபாட்டை தைரிமாக எதிர்த்து சொன்னவன் என் விகடன். நடிகர் விஜயின் கீழ்த்தரமான படங்களை நாசுக்காக அவனுக்கே எடுத்து சொன்ன விகடன், நல்ல படங்களுக்கு சிறந்த விமர்சனங்களை அளித்தவன்.

'அனைவரும் இன்புற்றிபதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பாரபரியேன்' என்பதை சரியாக பின்பற்றும் என் விகடன், நிர்வாக திறமைகளை எனக்கு கற்று தந்தவன். இலவச பொருட்களை மற்ற வார பத்திரிகைகள் கொடுத்த பொழுது, சற்று மயங்கிய விகடன் சுதாரித்து கொண்டு தன்னை மெருகேற்றி கொண்டு பழைய இடத்தை பிடித்தவன். தான் செய்த தவறை திருத்தி கொள்ளும் விகடன் மன்னிப்பு கேட்பதற்கும் தாங்கியவன் அல்ல. 75 ஆண்டு பவள விழாவிற்கு 'ழ'போடுவதா 'ள'போடுவதா என்று வாசகர் எழுப்பிய சந்தேகத்தை, சிறுதும் துச்சமாக கருதாமல் 'நாங்கள் அதை பற்றி யோசிக்கவில்லை, பல தமிழ் ஆசிரியர்களுடன் கேட்டதில் இரண்டுமே பயன் படுத்தலாம் என்றனர்' என்று தன் தவறை ஒப்புகொண்டவன் என் விகடன். அந்த பழக்கத்தை எனக்குள் விதைத்தவன் விகடன் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

விகடனை பற்றி எழுத நினத்தால் எதை எழுதுவது எதை விடுவது என்ற சிந்தனை போர் வருவது நிச்சயம். அதையும் மீறி என்னால் முடிந்த அளவிற்கு எழுதி விட்டேன். இதை படிக்கும் உங்களுக்குள் கண்டிப்பாக பழைய விகடன் நினைவுகள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதோ 85 வருடங்களை கடந்து இளமையாக வலம் வந்து கொண்டு இருக்கும் விகடனில் என்றாவது ஒரு நாள் என் பெயர் வரும் என்று காத்து கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment